வனத்துறையினர் ஏர்வாடி கடற்கரை பகுதியில் அதிகமாக வளர்ந்து வரும் பவளப் பாறைகளை பாதுகாத்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கடற்கரை பகுதியில் பவளப்பாறைகள் அதிகரித்துள்ளன. இந்த பவளப்பாறைகள் 15 முதல் 20 அடிக்குள் இருந்தால் மட்டுமே பாறையின் மீது சூரிய ஒளி படுவதன் மூலம் உருவாகிறது. ஆனால் அதிக வெப்பநிலை தரக்கூடிய வெயில் காலங்களில் இந்த பவளப்பாறைகள் அழிந்து வெள்ளை நிறமாக மாறுகிறது. அதன்பிறகு கடலுக்குள் செல்லும் சூரிய ஒளியின் தன்மையை பொறுத்து பவளப்பாறைகள் மீண்டும் வளர ஆரம்பிக்கும். இந்த பவளப்பாறைகள் குறித்து ஏர்வாடி மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை துணை மண்டல அலுவலர் கனகராஜ் கூறும்போது, 1972ஆம் ஆண்டு முன்பு கடலுக்கு அடியில் வளரும் இந்த பவளப்பாறைகளை வீடுகள் மற்றும் தார்சாலை போன்ற இடங்களில் பயன்படுத்தினர்.
ஆனால் 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடல் உயிரினங்களில் ஒன்றான பவளப்பாறையை திருடிச் செல்வது சட்டவிரோதமான குற்றமாகும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேக வடிவு, மான்கொம்பு வடிவு, மூளை வடிவு, தேன்கூடு வடிவு போன்ற பல்வேறு வடிவத்தில் பவளப்பாறைகளை மன்னார் வளைகுடா பகுதியில் மட்டும்தான் பார்க்க முடியும் என்றும், வனத்துறையினர் ஏர்வாடி பிச்சை முப்பன் வலசை பகுதி கடற்கரையில் அதிகமாக வளர்ந்து வரும் பவளப் பாறைகளை மிகவும் கவனமாக பாதுகாத்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் சுற்றுலா பயணிகளை படகுகளில் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணல் திட்டுக்கு அழைத்து சென்று கண்ணாடி படகு மூலம் இந்த பவளப்பாறைகளை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து கடல்வாழ் உயிரினங்களைக் கணக்கெடுப்பதன் மூலம் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறித்து அறியமுடியும். எனவே பவளப்பாறைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.