தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்த போது அமைச்சரவை மாற்றப்படும் என்று பேசப்பட்டது. அதன்பிறகு அமைச்சரவையில் இருப்பவர்களின் மீது ஏதேனும் புகார் வந்தால் உடனடியாக அவர்களை அம்மா ஜெயலலிதாவின் பாணியில் ஸ்டாலின் தூக்கி விடுவார் என்று பேச்சு அடிபட்டது. கடந்த 18 மாதங்களாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், அமைச்சரவை தற்போது வரை மாற்றி அமைக்கப்படவில்லை. ஒருவேளை அமைச்சர்கள் மீது எந்த புகாரும் வரவில்லையா என்று கேள்வி எழுப்பினால், மூத்த அமைச்சர்களே பொதுவெளியில் சர்ச்சையாக பேசி சிக்கலை ஏற்படுத்துகிறார்கள் என்பது தான் உண்மை.
இதனால் முதல்வர் ஸ்டாலின் சொந்த கட்சியினரால் தூக்கம் இன்றி தவிக்கிறேன் என்று கூறினார். திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சர்ச்சையாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்டாலின் வெளிப்படையாகவே பொதுக்குழு கூட்டத்தில் பேசினார். ஒவ்வொரு நாளும் காலையில் கண்விழிக்கும் போது நம் கட்சியினர் எந்த பிரச்சினையை கொண்டு வருவார்கள் என்ற பயத்துடன் தான் கண் விழிக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியதை எதிர்க்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விமர்சித்து வருகிறார்கள். சொந்த கட்சி காரர்களை கூட ஸ்டாலினால் அடக்க முடியவில்லை என அதிமுக உட்பட பல கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.
அதன் பிறகு சொந்தக் கட்சியினர் செய்யும் தவறுகளை ஸ்டாலின் வேதனையோடு கூறியிருந்தாலும் கட்சியில் சீனியர்கள் தங்களுடைய தவறை திருத்திக் கொள்வது போல் தெரியவில்லை. அடிக்கடி பொதுவெளியில் சர்ச்சையான வார்த்தைகளை பேசுவதால் திமுக மேல் இடத்திற்கு மக்களிடத்தில் கெட்ட பெயர் வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு அமைச்சரையும் ஸ்டாலின் தனியாக சந்தித்து அறிவுரை வழங்கியதாக கூறப்படும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யா மொழியையும் தனியாக சந்தித்து அறிவுரை வழங்கியுள்ளாராம்.
இதனால்தான் அமைச்சர் அன்பில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சுருக்கமாக பேசிவிட்டு நழுவி விடுகிறார் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து கட்சியில் சர்ச்சையாக பேசி வரும் ஒரு அமைச்சரை அமைச்சரவையில் இருந்து தூக்கிவிட்டு தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அப்பதவிக்கு கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. மேலும் அந்த சர்ச்சை அமைச்சரின் மனம் நோகாதபடி அவருக்கு ஒரு சிறப்பான பதவியை வழங்குவதற்கும் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.