Categories
மாநில செய்திகள்

“பிகில் சர்ச்சை : “நோட்டீஸ் அனுப்பியது அதிகார துஷ்பிரயோகம்”… திரும்பப்பெற வேண்டும்… கே.எஸ் அழகிரி பாய்ச்சல்.!!

பிகில்  திரைப்படம் நிகழ்ச்சி நடந்ததற்காக கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீசை உயர்கல்வித் துறை திரும்பப்பெற காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் தேதி  தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக  நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணி ருக்காங்க என்று தமிழக அரசை சீண்டிய விஜய்,  யாரை எங்கே வைக்கவேண்டுமோ அவர்களை அங்கே வைத்தால் இது போல நடக்காது என்று சாடினார். விஜயின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுக அமைச்சர்கள்  இந்த கருத்துக்கு கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்தனர்.

Image result for பிகில்

இந்நிலையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்?  என்று  விளக்கம் தர தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘பிகில் விழாவுக்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது?’ இதற்கு சரியான விளக்கம் தர வேண்டும் என்று தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

Image

இந்த நிலையில், பிகில்  திரைப்படம் நிகழ்ச்சி நடந்ததற்காக கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீசை உயர்கல்வித்துறை திரும்பப்பெற காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறும்போது, பிகில் நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியது அதிகார துஷ்பிரயோகம். பிகில் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள அரங்கில் தான் நடைபெற்றுள்ளது. முன்னதாக சென்னை சட்டக் கல்லூரி விழாவில் காமராஜர், அண்ணா, கருணாநிதி எம்ஜிஆர் உரையாற்றி இருக்கின்றனர்.

 

பிகில் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு போற்றப்படுகின்ற அற்புதமான இளம் கலைஞர் விஜய். விஜய் பேசிய சில கருத்துக்களை அதிமுக அரசு தவறாக புரிந்து கொண்டுள்ளது. பொறியியல் கல்லூரிக்கு அனுப்பிய நோட்டீசை தமிழக உயர்கல்வித்துறை திரும்ப பெற வேண்டும். கல்வி  நிறுவனங்களுக்கு தமிழக அரசு மிரட்டல் விடுக்கின்றன. கல்வி நிறுவனங்களில் பொது ஆளுமைகள் பேசுவது வழக்கம், இதற்கு விமர்சனங்களும் வரும். கல்லுரிக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெறவில்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |