காங்கிரஸ் கட்சி, பெண்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பரவுவதால், பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
எனவே, பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதில் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்தியின் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இதில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
அதன்படி, அண்மையில் காங்கிரஸ் கட்சி சார்பாக, பரேலியில் பெண்களுக்கென்று மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலருக்கு காயம் ஏற்பட்டது. எனவே, பாஜக, காங்கிரஸ் அவர்களின் அற்பத்தனமான அரசியலுக்காக பெண்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள் என்று விமர்சித்தது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் ”நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்” என்னும் தலைப்பில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்த திட்டமிட்டிருந்த காங்கிரஸ், தற்போது அதனை தள்ளி வைத்துள்ளது.
மேலும், நொய்டாவில் பாஜக சார்பாக பிரச்சார கூட்டம் நடைபெற இருந்தது. அதனை முதல்வர் யோகி ஆதித்யநாத் ரத்து செய்வதாக தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பே, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டுமா? என்று உத்தரபிரதேச மாநிலத்தின் அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அதற்கு தகுந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கட்சிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.