வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான புகாரை ஏற்க மாநில அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் ஊராட்சியில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் வாணியம்பாடி புத்து கோவில் பகுதியில் வசித்து வரும் இரண்டு பேருக்கு 7 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். அதன்பின் பல ஆண்டுகளாக கடனை கேட்டும் அவர்கள் அசல் மற்றும் வட்டியை திருப்பி தராமல் இழுபறி செய்துள்ளனர்.
இதனால் கடனை வசூலிக்க முடியாத விரக்தியில் ராம்குமார் கடிதம் எழுதிவிட்டு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ராம்குமாரின் உறவினர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, போலீசார் நீங்கள் வசிக்கும் பகுதியானது ஆந்திராவில் உள்ளதால் இந்த புகாரை வாங்க முடியாது எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனையடுத்து தமிழக அரசால் வழங்கப் பட்டிருக்கும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புல்லூர் ஊராட்சியில் ராம்குமார் வீடு கட்டி வரி செலுத்திய ஆதாரங்களை அவரது உறவினர்கள் போலீசாரிடம் காண்பித்துள்ளனர்.
ஆனாலும் போலீசார் அந்த புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதனால் கோபமடைந்த ராம்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் ராம்குமாரின் பிணத்துடன் அவரது சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், கொடுத்த கடனை திருப்பி வசூலித்து தர வேண்டுமெனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் திடீரென அங்கு வந்து நீங்கள் வசிக்கும் இடமானது எங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் உள்ளது என்று கூறி ராம்குமாரின் உடலை குப்பத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து இரு மாநில வருவாய் துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்ததில் அது தமிழக எல்லைக்குள் இருப்பதால் அவரின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எல்லையை தீர்மானிப்பதில் அதிகாரிகள் மற்றும் போலீசார் இடையே வந்த குழப்பத்தால் ராம்குமாரின் உடலானது மாறி மாறி இரு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.