ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் நோய் தொற்று அதிகரித்தால்,அதிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது அவசியமாக உள்ளது. ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்துள்ளது.
சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது. நம் நாட்டை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார். Aarogya Setu செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ள அவர், இந்தியாவே இணைந்து இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.