ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா? என்பது குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் படிக்கும் அதே பள்ளியில் தேர்வுகள் எழுதலாம். மேலும் ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் மற்றும் மாணவர்களில் வேறு ஊர்களில் இருப்பதன் காரணமாக தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி ஜூன் 1ல் தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். வெளியூர்களில் இருந்து மாணவர்கள் தேர்வுக்கு வருவதற்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்வது குறித்தும் இந்த ஆலோசனையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.