10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் வெளியிட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசியர்கள் சங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் ஜூன் மாதம் தேர்வை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி வரும் நிலையில் தேர்வு நடத்தலாமா இல்லை வேண்டாமா என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒரு வேலை தேர்வை நடத்தலாம் என முடிவு எடுக்கும் பட்சத்தில் தேர்வு மையத்தை தயார் செய்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கும் முறை குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது, இந்த ஆலோசனை நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.