தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்துவது கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார். பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த விரைவில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் 10ம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.