வடக்கு மஹாராஷ்டிரா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மும்பை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. ரயில் தண்டவாள பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
சாலை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் அத்தியாவசிய பணிகளை வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மகாராஷ்டிரா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.