தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் படிக்க சென்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட நிலையில், நோய் தாக்கம் குறைந்ததால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பள்ளி மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை கற்றுக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அறிவியல், தொழில்நுட்பம், கலை, என்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்தலாம் என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும் என உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் மாணவர்கள் வகுப்புக்கு வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனால் தற்போது நடத்தப்பட்ட வரும் ஆன்லைன் வகுப்புகளையே தொடர சில கல்லூரிகள் திட்டமிட்டிருக்கின்றன.