சேலம் அருகே தாத்தாவுடன் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் ஒருவர் தனது தாத்தாவுடன் காரைக்குடி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீச்சல் பழக ஆசைப்பட்டு சென்றுள்ளார். அங்கே அவரது தாத்தா அவனது உடலில் கேனை கட்டிவிட்டு கிணற்றுக்குள் இறங்கி நீச்சல் அடிக்குமாறு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
கேனில் நன்றாக மிதந்துகொண்டு மாணவன் நீச்சல் அடித்து கொண்டிருக்க, அவரது தாத்தா சிறிது நேரம் இப்படியே நீந்திக்கொண்டு இரு. நான் வீட்டிற்கு சென்று வருகிறேன் என மாணவனை தனியாக தவிக்க விட்டுச் சென்றுள்ளார். பின் திரும்பி வந்து பார்க்கையில், கேன் மட்டும் மேலே மிதந்து கொண்டிருக்க மாணவனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்திலும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து தீவிர தேடுதல் பணி தொடங்கியுள்ளது. பின் காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கேன் உடலிலிருந்து கழன்று மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.