கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கிறது என்று நிலையில், தேசிய புலனாய்வு முகமை இதை ஆய்வு செய்கின்ற நிலையில், அதற்கு ஒத்துழைப்பு நல்குவதே ஜனநாயக சக்தியாகும். பாஜகவினருக்கு இது பெரிய வாய்ப்பு. இதை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்வார்கள்.
இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நாம் தொடர்பு படுத்த முடியாது. இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் நான் இதில் தொடர்பு படுத்த முடியாது. ஒரு சில புல்லுருவிகளாக இருக்கின்ற தனி நபர்கள் தொடர்பு வைத்திருக்கலாம். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய இயக்கங்களே முன்வந்து வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள்.
அதே போல இஸ்லாமிய சமூகமும் அதை ஏற்கவில்லை, அதை ஊக்கப்படுத்தவில்லை. சிலிண்டர குண்டுவெடித்து இறந்தவரின் நிகழ்வில் யாரும் பங்கேற்கவில்லை.கோவை வெடிப்பு சம்பவத்தின் விசாரணையை NIAவிடம் கொடுக்க கூடாது என்ற விவாதம். தமிழ்நாடு அரசின் மாநில உரிமை என்கின்ற அடிப்படையில் அந்த கோணத்தில் வாதம் சரி. ஆனால் பிராக்டிக்கலாக பார்த்தால், இந்த வழக்கை பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு என்று நிலையில், மைய அரசு கையில் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என தெரிவித்தார்.