முதல்வர் ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நேற்று இரவு முதலே நான் மிகுந்த மகிழ்ச்சியின் இருந்தேன். ஏனென்றால் நான் படித்த பள்ளிக்கு போகப் போகிறேன் என்று. பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் மீண்டும் கிடைக்காத காலம். நான் இந்த பள்ளியில் சேர்வதற்காக தேர்வு எழுதினேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இந்த பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனது தந்தை கலைஞர் கருணாநிதி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
பள்ளியில் அமைச்சரின் மகன் என்று நான் காட்டிக் கொள்வதை எனது தந்தை விரும்ப மாட்டார். நானும் அமைச்சரின் மகனாக நடந்து கொண்டதில்லை. இது என்னுடன் படித்த உங்கள் அனைவருக்கும் தெரியும். நான் படிக்கும் காலத்தில் அரசு பேருந்தில் தான் வருவேன். தற்போதும் அரசு பேருந்து தான் வரவேண்டும் என நினைத்தேன். ஆனால் பாதுகாவலர்கள் அதற்கான அனுமதிக்க மாட்டார்கள். நான் அரசியலுக்கு வருவேன் எனவும் ஒரு கட்சியின் தலைவராக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வருவேன் எனவும் நினைத்து பார்த்ததில்லை.
ஆனால் தற்போது அது நடைபெற்றுள்ளது. நான் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட சென்னை மேயர் நான்தான். தற்போது இந்த பள்ளிக்கு முதலமைச்சராக வரவில்லை. முன்னாள் மாணவராக வந்திருக்கிறேன். நான் இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்ததற்கு இந்த பள்ளியும் ஒரு முக்கிய காரணம் என்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் அனைத்தையும் அரசு மட்டுமே வழங்க முடியாது. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிகளுக்கு முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் அதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது என கூறியுள்ளார்.