காங்கிரஸ் பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாகூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தன் தொகுதிக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் தடுத்துவருவதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தார்.
பத்திரிகை வாயிலாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்த அவர் கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து முதலமைச்சர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாகக் கூறுகையில், “கட்சி விரோத நடவடிக்கைகளில் தனவேலு ஈடுபட்டதால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுள்ளார். மேலும் அவர் கட்சி நடவடிக்கைகளில் மீறிசெயல்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.