களிமண்ணை ஆற்றுமணலாக மாற்றி விற்பனை செய்துள்ள மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உலா வசிஷ்ட நதிக்கரையில் சந்தேகத்திற்கிடமான தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக மணல் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் சாதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது களிமண்ணை ஆற்று மணல் போல மாற்றி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக வசிஷ்ட நதியில் இருந்து திருட்டுத்தனமாக தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் களிமண்ணை ஆற்றுமணலாக மாற்ற பயன்படுத்தி 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம், ஜேசிபி, டிராக்டர் என அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கும்பல் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு அல்லது திருட்டுத்தனமாக மண்ணை அள்ளி வந்து அதை தண்ணீர் கலந்து இயந்திரம் மூலமாக நைசாக அரைத்து ஆற்றுமணல் போல தயாரித்து விற்பனை செய்துள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கனிம வளங்களை திருடுதல், மணல் கொள்ளை, சட்டவிரோதமாக ஆளை நிறுவியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் போலி மணலின் தன்மை குறித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதே போன்று பல இடங்களில் போலியாக களிமண்ணை ஆற்று மணலாக மாற்றும் தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு மணலை போலியாக தயாரித்து வந்த கும்பல் போலீசாரிடம் சிக்கியது. போலி மணல் தயாரித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு விபத்துக்கு வழிவகுக்கும் இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.