கையால் மலம் அள்ளுதல் தடை சட்டத்தை அரசு இயற்றி இருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவையில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வெறும் கையால் மனித கழிவுகளை அகற்றும் கொடுமை நடந்து வருகிறது. பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட மாநகராட்சி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை 174 பேர் மனிதக் கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். குறிப்பாக கோவையில் மட்டும் 19 பேர் இறந்துள்ளனர்.
இதில் சில மரணங்கள் கணக்கில் வராமலே இருந்து விடுகின்றன. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் நமது மாநிலத்தில் கும்பகோணம் போன்ற பகுதிகளில் மலக் கழிவுகளை அகற்றுவதற்காக ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு பாண்டிகூட் 2.0 என்று நவீன ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரோபோக்கள் முறையாக இயங்குவது இல்லை என்று தெரிவிக்கின்றன. இதுபோன்ற திட்டங்களை பயனுள்ளதாகவும் முழுமையாக மாற்றினால் மட்டுமே மனிதர்கள் வெறும் கையால் கழிவுகளை அள்ளி சுத்தம் செய்வதை தடுக்க முடியும்.
சமீபத்தில் கூட கோவை காந்திபுரம் அருகே அரசு பாலிடெக்னிக் சிக்னல் அருகே ஆவாரம்பாளையம் சாலையில் பெட்ரோல் பங்கின் நுழைவாயிலில் அமைந்துள்ள பாதாள சாக்கடையில் இறங்கி கழிவுகளை அகற்றி அதோடு, இதனால் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பலர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்களை கழிவு அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு உடைகளையும் வழங்குவதில்லை.
உயர் அதிகாரிகளும் பணியாளர்களின் பாதுகாப்பைப் பற்றி எல்லாம் கவலைப் படவில்லை. அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மலக்குழியில் இறங்கி அனைத்து கழிவுகளையும் சுத்தம் செய்கின்றனர். கையால் கழிவுநீரை தூய்மைபடுத்தும் பணியாளர்கள் பார்க்கும்போது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அவலங்கள் இருக்கக் கூடாது என்று சட்டம் ஏற்றியபின் இதுபோன்ற கொடுமைகள் நடந்துதான் வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் என்பதாலே அரசு இதுபோன்ற அலட்சியப் போக்கை கையாளுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.