இந்த சிகுரெட்டுகள் குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல பலரை மாற்றிவிடுகிறது.
உலகளவில் புகையிலை அதிகம் விற்பனை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை பற்றியும், நோயின் தாக்கத்தை பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை.
புற்றுநோய் வந்தால், ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்து, நிச்சயம் இறந்து விடுவார்கள் என்று ஒரு பொய்யான கருத்தை நமது இந்திய சினிமா மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
புற்றுநோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு செய்ய தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் நவம்பர் 7-ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
முதன்முதலில் புகையிலையோ அல்லது சிகரெட், பீடி பழக்கத்தை ஒருவர் முயற்சி செய்யும்போது, அவரது நினைவில் அவருக்கு தெரிந்த புகைப்பிடிக்கும் ஒருவர்தான் வருகிறார். அவர் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டோ, 4 கட்டு பீடியோ குடிக்கிறார். அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை. நான் 4 -5 சிகரெட் தானே குடிக்கப்போகிறேன் என்று நினைக்கிறார்கள்.
நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்து வருகிறது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?
தற்போது கொரோனா யாருக்கெல்லாம் வருகிறது என்று தெரியவில்லை ஆனால் கொரோனாவிற்குஎல்லாம் முன்னோடியாக புற்றுநோய் என்பது இருக்கிறது.
புகையிலை உட்கொள்ளவில்லை, எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் புற்றுநோய் எப்படி வந்தது என்று நோயாளிகள் பலர் மருத்துவரிடம் கேட்பதை பார்த்திருப்போம். உண்மையில் புற்றுநோய் ஒரு புரியாத புதிர் என்றே சொல்லலாம்.
கார்சினோஜென்கள் எனப்படும் ஒருவகை ஊக்கிதான் நமது உடம்பில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இது புகையிலையில் மட்டுமே இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் வழியாகவும் உடலுக்குள் நுழைகின்றது.
செயற்கை வேதிப்பொருட்களான சோடியம் பென்சோயிட், சோடியம் நைட்ரேட் ஆகியவை குழந்தைகளைப் பாதிப்பதுடன், பெரியவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வரக் காரணமாகின்றன. செல்கள் பாதித்தால் கட்டியாகும். மரபுவழி, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகள் சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்க்கான கட்டியா என்று தீர்மானிக்கின்றன.
புற்றுநோய்கள் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. எந்த அளவு பாதிப்பு, குணப்படுத்த முடிவு, எவ்வளவு காலமாகும் என்பதை புற்றுநோயின் காலம்தான் முடிவு செய்யும்.
புற்றுநோய்களில் மார்பகம், கர்ப்பப் பை, நுரையீரல் ,ஆண்களுக்கு வாய் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் என்று ஏற்படும் பகுதிக்கேற்ப ஏராளமான வகைகள் இருக்கின்றன.
புற்றுநோய் ஒரு நாளில் ஊருவாவதில்லை. நாள் பட்ட புண் போன்றதுதான். எனவே குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது முழு உடலை பரிசோதனை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை இல்லை என்றாலும், இதற்காக ஒரு தொகையை தனியார் மருத்துவமனையில் கொடுப்பதில் தவறேதுமில்லை.
புற்றுநோயின் தீவிரத்துக்கு ஏற்றார் போல அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை, இலக்கு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற பலவகையான சிகிச்சை முறைகள் இந்தியாவிலே உள்ளன.
மரணம் என்பது அனைவருக்கும் ஏற்பட கூடிய ஒன்றுதான். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோ… இதோ… என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது
புற்றுநோய் வந்து அதை மன உறுதியோடு எதிர்த்து போராடி வெற்றிகொண்டவர்கள் பலர் நம்மிடையே உள்ளனர் என்பதை நினைவில் வைத்து மன உறுதியோடும் நம்பிக்கையோடும் போராடுவோம்.