‘கால்ஸ்’ படத்தை காண சென்னையில் உள்ள திரையரங்குகளில் மட்டும் பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்த சித்ரா சின்னத்திரை தொடர்களில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த சித்ராவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் நடித்த முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன் இந்த உலகத்தை விட்டு விடை பெற்று விட்டார் . இவரது திடீர் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது .
தற்போது சித்ரா நடித்துள்ள முதல் படமான ‘கால்ஸ்’ பிப்ரவரி 26 அதாவது இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . இயக்குனர் ஜெ. சபரீஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் நிழல்கள் ரவி, தேவதர்ஷினி ,ஜீவா ரவி , டெல்லிகணேஷ் ,வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் சென்னையில் மட்டும் இந்த படத்தை காண பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என படக்குழு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .