சீன ராணுவத்தின் முன்னாள் அதிகாரி இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லையில் படைகள் இல்லாத பகுதியை அமைக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஒரு வருடத்திற்கும் அதிகமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டு இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் பலியாகினர். எனவே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன்பின்பு பாங்காங் ஏரி போன்ற சில பகுதிகளில் இரண்டு நாடுகளும் தங்களது படைகளை வெளியேற்றின. எனினும் தெப்சாங் போன்ற பகுதிகளில் படைகள் உள்ளது. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜூபோ கூறுகையில், இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழல் உருவாவதை உறுதிப்படுத்த, முன்பே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதனை சரியாக பின்பற்றி ஒற்றுமையை ஏற்படுத்தும் நம்பிக்கைக்குரிய செயல்பாடுகளில் இரண்டு நாடுகளும் ஈடுபடவேண்டும். எல்லை பகுதியில் மோதல் நிலவுவதை தடுக்க படைகள் இல்லாத பகுதிகளை உருவாக்குவது குறித்து இரு நாடுகளும் ஆலோசிக்க வேண்டும். எல்லைப் பகுதிகள் சரியாக வரையறுக்கப்படாத காரணத்தால் தான் பிரச்சனைகள் உருவாகிறது. எனவே அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.