சீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் வைரஸ்க்கு 7 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது பூச்சிகள் மூலமாக புதிய வைரஸ் பரவி கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பூச்சிகள் மூலம் பரவிக் கொண்டிருக்கும் வைரஸால் தற்போது வரை 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 60க்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சு மாநிலத்தில் தற்போது வரை 37 க்கும் மேலானவர்களும், அன்ஹு மாநிலத்தின் 23 பேரும் எஸ்எப்டிஎஸ் என்ற வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்.
ஜியாங்சு மாநிலத்தில் இருக்கின்ற நான்ஜிங் நகரை சேர்ந்த ஒரு பெண் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் மற்றும் இருமலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவரை தவிர கிழக்கு சீனாவில் இருக்கின்ற ஹிஜியாங் வாகனம் மற்றும் அன்ஹு மாகாணத்தில் தற்போது வரை ஏழு பேர் இந்த வைரஸிற்கு பலியாகியுள்ளனர். இந்த எஸ்எப்டிஎஸ் வைரஸ் சீனாவிற்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து சீனாவில் இருந்து கொண்டிருக்கும் இந்த வைரஸ் பன்யா வைரஸ் என்ற பிரிவைச் சார்ந்தது. இது உண்ணி, நச்சு ஈ, வண்டுகளில் இருந்து மனிதர்களை கடித்தல் மூலமாக வைரஸ் பரவுகிறது.
இதுபற்றி ஹிஜியாங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் ஹெங் ஜி பாங் கூறும்போது, ” இந்த வைரஸ் மனிதர்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டவை என்பதை நாம் ஒருபோதும் மறுக்க இயலாது.ஒரு நோயாளியின் உடலில் ரத்தம் மற்றும் சளி மூலமாக மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. அதனால் மக்கள் அனைவரும் பூச்சிக் கடிகளில் கவனமாக செயல்பட வேண்டும். மற்றபடி மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். இந்த வைரஸால் பாதிப்படைந்தவர்களுக்கு காய்ச்சல், ரத்த சிவப்பு அணுக்கள் குறைதல், வயிறு தொடர்பான சிக்கல்கள், வெள்ளை அணுக்கள் குறைதல், உடல் தசை வலி மற்றும் நரம்பு ரீதியான பிரச்சனைகள் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.