சீன நாட்டின் விமானங்கள், தைவானின் வான் பாதுகாப்பு எல்லையை மீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1949-ஆம் வருடத்தில், நடந்த உள்நாட்டுப் போரில் தைவான் மற்றும் சீன நாடுகள் தனித்தனியாக பிரிந்தது. எனினும் சீனா, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவை ஏற்படும் பட்சத்தில், படைபலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று கூறி வருகிறது.
இந்நிலையில் சீனா, சிபிடிபிபி எனப்படும் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய கடந்த வாரத்தில் விண்ணப்பித்திருந்தது. இதே ஒப்பந்தத்தில், தைவான் அரசும் இணைவதற்காக கடந்த வியாழக்கிழமை அன்று விண்ணப்பித்துள்ளது. இதனை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.
இது தொடர்பில் சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளதாவது, தைவானுடன் அதிகாரபூர்வமாக பகிர்ந்துகொள்வது எந்த நாடாக இருந்தாலும், அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். மேலும் தைவான் அதிகாரபூர்வமான ஒப்பந்தங்கள் மற்றும் அமைப்புகளுடனும் சேர்வதையும் எதிர்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனையில், தைவானை மிரட்டுவதற்காக சீனா, தங்கள் போர் விமானங்களை அனுப்பியுள்ளது. தைவான் அரசு, அணு ஆயுதங்களை ஏந்தும் திறனுடைய இரண்டு விமானங்கள் உட்பட 24 விமானங்கள், தங்களது வான் பாதுகாப்பு எல்லையை மீறி புகுந்ததாக கூறியிருக்கிறது.