சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 304 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள், மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை தங்கள் நாட்டில் கொரானா வைரஸுக்கு 304 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 31 மாகாணங்களில் 14, 380 பேருக்கு கொரானா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 1,921 பேர் உட்பட 2,590 பேருக்கு கொரானா வைரஸ் தாக்கம் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 2,110 பேரின் நிலை தொடர்ந்து மிகவும் கவலையளிக்கும் விதமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 328 பேர் சிகிச்சை முடிந்து நல்லபடியாக தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
இதுதவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேலும் 19, 544 பேர் சந்தேகத்தின்படி தனிவார்டில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் 4, 562 பேருக்கு கொரோனா அறிகுறி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள சீன தேசிய சுகாதார ஆணையம், அந்த மாகாணத்தில் மட்டும் நேற்று 45 பேர் பலியாகி விட்டதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் ஹாங்காங் சுயாட்சி பகுதியில் 14 பேருக்கும், மகோவ் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தில் 7 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சீன பெருஞ்சுவரை தாண்டி பல நாடுகளில் கொரானா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்படுள்ள போதிலும், இதுவரை ஒரு உயிர் பலி கூட நேரிடாமல் இருந்தது. இந்தநிலையில், சீனாவின் வூகான் நகரில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சமீபத்தில் வந்த 44 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்பானது உலக நாடுகளை பதற வைத்துள்ளது. சீனாவை தாண்டி கொரானா வைரஸுக்கு நேரிட்ட முதல் பலியாக கருதப்படுகிறது. இதையடுத்து அச்சத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.