கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்ப கட்டமாக மனிதர்களிடம் சோதனை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
உலகில் வைரஸ் முதலில் பரவத் தொடங்கியது சீனாவில் தான். வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதும் பலவிதமான சர்ச்சைகள் எழுந்தது. சீனாதான் இந்த வைரசை உருவாக்கியது என்றும் சீனா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்பதற்காக இதனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு வூஹான் மாகாணத்தில் உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகம் இருப்பதால் அங்கிருந்து வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது எனவும் பலவிதமான தகவல்கள் பரவி வந்தன. ஆனால் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரம் ஒன்றும் இதுவரை இல்லை.
இதனிடையே அதிவேகமாக சீனாவில் பரவிய கொரோனா தொற்று திடீரென கட்டுக்குள் வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. பல நாடுகள் சீனா எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என கேள்வி எழுப்ப அதற்கு தங்களிடம் இருந்த பரிசோதனைக் கருவி மூலமே கட்டுக்குள் கொண்டு வந்ததாக சீனா கூறி கருவிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தது. ஆனால் சீனாவின் பரிசோதனை கருவிகளை ஐரோப்பிய நாடுகள் தரமற்ற கருவிகள் என்று விமர்சித்ததோடு அனைத்து நாடுகளும் குற்றம்சாட்டின.
இதனிடையே இந்தியா சீனாவிலிருந்து கருவிகளை இறக்குமதி செய்ய ஆடர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் சீனாவில் போடப்பட்ட ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டன இதுவும் உலக நாடுகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பல நாடுகளில் அதிகப்படியான உயிர்களை பறிகொடுத்த நிலையில் சீனாவில் 3341 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்பது அனைவரையும் சந்தேகம் கொள்ள வைத்தது. இதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது தொடர்பாக சார்க் மாநாட்டில் சீனா தங்களது கருவிகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவர்களால் மட்டுமே கொரோனாவை வீழ்த்தியதாக தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து ஆரம்பக் கட்டமாக மனிதர்களிடம் சோதனையை தொடங்கியுள்ளது சீனா. எங்கிருந்து தொற்று பரவியது அதே ஆராய்ச்சி ஆய்வகத்தில் தான் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ஜிங்கை சேர்ந்த நாஸ்டாக் லிஸ்டட் சினோவோக் பயோடெக் என்ற குழுவை சேர்ந்தவர்களால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.