கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீன பேராசிரியரை அமெரிக்காவில் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் லியு கொரோனா குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் அவரது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ரோஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. லியுவை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர் அவரது காரில் தற்கொலை செய்து இறந்து கிடந்துள்ளார்.
லியுவை கொன்றுவிட்டு அவர் தனது காருக்கு திரும்ப சென்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என அவர்கள் நம்புகின்றனர். ஆனால் லியு சீன நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் குறி வைக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா தொற்றுக்கான செல்லுலார் வழிமுறைகளை பற்றி நன்கு புரிந்துகொள்ள அவர் தொடர்ந்து பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.