ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக குழந்தைத் தொழிலாளர்கள் சங்க இயக்குனர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில் அதிக அளவில் குழந்தைகள் கொண்ட நாடு இந்தியா ஆகும். இதில் கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தின கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். சாலைகளில் பொருட்களை விற்பதும் விவசாயம் தொடர்பான வேலைகளை செய்வதுமே அவர்களின் வேலை. கொரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த குழந்தைகள் சொல்ல முடியாத அளவு பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். வேலையின்றி உணவின்றி நாட்களை எவ்வாறு கழிப்பது என்பதே அவர்களது குழப்பமாக இருந்து வருகிறது.
சேட்னா என்ற குழந்தைத் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் இயக்குனர் சஞ்சய் குப்தா அளித்த பேட்டி ஒன்றில் “வீடு இல்லாத குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். அவர்கள் பாலங்களுக்கு அடியிலும் தெருக்களிலும் படுத்து உறங்குகிறார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அனைவரையும் வீடுகளில் இருக்க சொல்லி உள்ள சமயத்தில் இந்தக் குழந்தைகள் வீடுகளுக்கு எங்கே போவார்கள்.
டெல்லியில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தெருவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் மொபைல்போன் வைத்திருப்பதால் எங்கள் அமைப்பின் சார்பாக அவர்களுக்கு விழிப்புணர்வு வீடியோவை அனுப்புகிறோம். அதற்கு பதில் வீடியோவாக அவர்கள் அனுப்புவதில் அவர்களது வாழ்க்கை குறித்த பயத்தை உணர்த்துகிறார்கள். சில குழந்தைகள் பெற்றோர் வேலை இன்றி இருப்பதால் வீட்டு வாடகை, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட பல பிரச்சனைகளைக் குறித்து சிந்தித்த வண்ணமே உள்ளனர்.
அவர்கள் அனுப்பிய வீடியோவில் ஒரு சிறுவன் தான் மூன்று நாளைக்கு ஒரு முறைதான் உணவு உண்பதாகவும் ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து உணவு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தான். மேலும் மற்றொரு சிறுவன் நாங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் எப்படி வாழப்போகிறோம் எனத் தெரியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தான் எனக் குறிப்பிட்டார் சஞ்சய் குப்தா.
அதோடு இதுபோன்ற காலகட்டத்தில் குழந்தைகள் மூன்று வேளை உணவு சாப்பிடுகின்றனரா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் அரசு வழங்கிய தொலைபேசி அழைப்புகளுக்கு குழந்தைகள் பற்றி தகவல்கள் வழங்க கிட்டத்தட்ட 3 லட்சம் அழைப்புகள் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 569 குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப்லைன் இயங்கி வருகிறது ரயில் நிலையங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக அழைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது இதில் காணாமல் போன குழந்தைகள் குழந்தைகள் மீதான வன்கொடுமை என தினமும் பல அழைப்புகள் வந்த வண்ணமே இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் சஞ்சய் குப்தா.