தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்கும் முடிவுகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரம் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்களது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். அதில், பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பரிசோதனைகளை விரிவுபடுத்தவும், கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும், விதியை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 4 மாவட்டங்களில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரையில் முழுஊரடங்கை அமல்படுத்த தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், நேற்றையதினம் தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் முழுஊரடங்கு இன்று மாலை முதல் அமல்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல, மற்ற மாவட்டத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசிடம் இருந்து தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியர்கள் கூட்டத்தில் பேசியது குறித்து இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் மக்களிடையே உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து வரும் திங்கட்கிழமையில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.