இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் 5,781 பேர் பாதிக்கபட்டுள்ளார். இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்திருப்பது குறிப்பித்தக்கது.