சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு தொடர்பாக மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து கண்காணிக்கவும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. 19 பேர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த மருத்துவ நிபுணர்கள் குழு கடந்த 3 முறை ஆலோசனை நடத்திய போது ஊரடங்கை நீட்டிப்பதற்கான அவசியத்தை தமிழக அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் 4வது முறையாக முதல்வர் தலைமையில், மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் தமிழகத்தில் எந்தளவு பரவி உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நேற்றையதினம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்திய குறிப்பிடத்தக்கது.