வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தடையும் செய்யக்கூடாது. காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை.
தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள், காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளியை உறுதி செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்தலாம். நகர்ப்புறங்களில் உள்ள கழிப்பறைகளை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.
டோக்கன் கொடுப்பதுடன் ரேஷன் பொருட்கள் தரும் நாள், நேரத்தை மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது. அந்த பகுதிக்கு எவரையும் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது அதை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி அடிக்கப்பட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் கிடைக்கின்றதா என மாவட்ட ஆட்சியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு எந்த தடையும் இல்லை என்ற முதல்வரின் உத்தரவு பல விவசாயிகளை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.