இன்னும் 15 நாட்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும் என்று முதல்வர் பழனிசாமி மக்களுக்கு இனிப்பான செய்தியை தெரிவித்துள்ளார்..
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 62 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118ல் இருந்து 180 ஆக அதிகரித்துள்ளது என்ற மகிழ்ச்சி செய்தியை கூறிய அவர், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது” என்றும் தெரிவித்தார்..
தொடர்ந்து பேசுகையில், சென்னையில் 4,900 தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படும். அத்தியாவசிய பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து தடையின்றி வரவழைக்கப்படுகிறது. பொருட்கள் வரத்தால் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் பிறமாநில தொழிலாளர்கள் யாரும் உணவின்றி வாடவில்லை. தினமும் 54,000 ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 20ஆம் தேதி முதல் செயல்படவுள்ள ஆலைகள் குறித்து முடிவு செய்ய குழுக்கள் அமைக்கப்படும். மத்திய அரசின் அனுமதி பெற்று எந்த தொழில் என்ற விவரம் வெளியிடப்படும் என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், அரசின் நடவடிக்கைகளால் இன்னும் சில நாட்களில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பூஜ்ஜியம் ஆகும். இன்னும் 15 நாட்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும். அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது. அரசின் நடவடிக்கைகளால் இன்னும் சில நாட்களில் பாதிப்பு பூஜ்ஜியம் ஆகும் என்று தெரிவித்தார். முதல்வரின் இந்த இனிப்பான செய்தி பயந்து போயிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.. முதல்வர் சொன்னது போலவே இன்னும் 15 நாட்களில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்பதை நம்பலாம்..