ஆழியாறு அணை, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜூன் 7ம் தேதி முதல் அக்.31ம் தேதி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 146 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஆனைமலை வட்டத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது.
நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து ஆழியாறு அணையிலிருந்து 1,156 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களில் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கபட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஈரோடு – பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நாளை முதல் ஜூன் 15ம் தேதி வரை 241.92 மில்லியன் கன அடி தண்ணீரை பாசனத்திற்கு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் விநியோகம் செய்யவும், 3 நாட்கள் இடைநிறுத்தம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூலை பெறுமாறு கோரிக்கை விடுத்துளளார்.