முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அவரின் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில், 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாகவும், அதற்காக எடுக்கப்படவேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக நேற்று ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், கொரோனா நோய்த்தொற்று தொடா்பாக தமிழக அரசு இதுவரை எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆளுநா் புரோஹித்திடம் முதல்வா் பழனிசாமி வழங்கியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர்கள் , மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை முதல்வர் தமிழக மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.