கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைநடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து நேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, நிலைமையை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.