போகி பண்டிகையன்று பொதுமக்கள் அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
போகி பண்டிகையை முன்னிட்டு “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கேற்ப பொதுமக்கள் தனது வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருட்களை எரித்து கொண்டாடுவர். இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றி மீனம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, நங்கநல்லூர், பல்லாவரம், கொளப்பாக்கம், பம்மல், பொழிச்சலூர், மணப்பாக்கம் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் போகி பண்டிகையை கொண்டாடுவதாக கடந்த 2011ஆம் ஆண்டு அதிக புகை தரக்கூடிய பொருட்களை பொதுமக்கள் எரித்தால், அதிலிருந்து வந்த புகையினால் சென்னை விமான நிலையத்தில் 45 வருகை விமானங்களும், 73 புறப்பாடு விமானங்கள் தரையிறங்க முடியாமல் சிரமப்பட்டன.
அதேபோல் கடந்த 2019 மற்றும் 202௦ஆம் ஆண்டும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வருகின்ற போகி பண்டிகையை முன்னிட்டு விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியிலுள்ள வீடுகளில் டயர், பிளாஸ்டிக் போன்ற அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரிப்பதனால் விமானநிலைய ஓடுபாதை தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்து கொள்ளும் அபாயம் ஏற்பட்டு விடும். எனவே வருகின்ற போகிப்பண்டிகையில் அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரிக்காமல் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியிலுள்ள பொதுமக்கள் விமான சேவைகள் பாதிக்கா வண்ணம் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.