சென்னையில் பணத்திற்காக சிறுவன் ஒருவன் தந்தையிடமே கடத்தல் நாடகம் ஆடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டுத்தனமாக இருக்கக்கூடிய சிறுவர்கள் தவறான பாதைக்கு சென்று பெற்றோர்களிடமிருந்து பணத்தை பறித்து எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்று யோசித்து பணத்தை விரயம் செய்த பல செய்திகளை நாம் பார்த்திருப்போம். குறிப்பாக பப்ஜி, ஃப்ரீ பையர் உள்ளிட்ட பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாத விளையாட்டிற்காக லட்சக்கணக்கான பணங்களை சிறுவர்கள் பலர் செலவு செய்ததை நாம் கண்டிருப்போம்.
ஆனால் தற்போது சென்னையில் பைக் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்திவரும் ராமின் என்பவரது மகன் அஜித் என்பவர் இவற்றுக்கெல்லாம் பல படி மேலாகச் சென்று தந்தையிடமே கடத்தல் நாடகமாடி லட்சக்கணக்கில் பணத்தை அபேஸ் செய்ய முயற்சித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவன் டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பாதையில்,
தன்னை யாரோ கடத்தி சென்று விட்டதாக தந்தைக்கு போனில் கூறியுள்ளான். இதனையடுத்து தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், டியூசனுக்கு செல்வது போல் ஒரு ஆட்டோவில் ஏறி ரூபாய் 10 லட்சம் கேட்டு நண்பர் மூலம் தந்தைக்கு போனில் மிரட்டல் விடுத்து சிறுவன் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.