அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு முகம் மற்றும் இரு கைகள் மாற்றி அமைக்கப்பட்ட அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஜோ டிமியோ என்பவர். தனது வேலையை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய இவர் பெரும் விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் இவரது உதடுகள் மற்றும் இமைகள் இழந்ததால் இவர் முகம் முழுவதும் சிதைந்து போனது. மேலும் அவரது இரண்டு கைகளிலுள்ள விரல் நுனிகள் வெட்டி எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதன்பின் அவருக்கு பல உயிர் காக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் அவர் சுதந்திரமாக சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் பெரிதும் அவதிப்பட்டார். அவரின் நிலைமையை அறிந்து, NYU லாங்கோன் ஹெல்த் மருத்துவமனை அவருக்கு ஒரு மாற்று வாழ்க்கையைக் கொடுக்கும் முடிவெடுத்தது.
அதன்படி முகம் மாற்றுத் திட்டத்தின் இயக்குனர் அறுவை சிகிச்சை நிபுணர் எட்வர்டோ ரோட்ரிக்ஸ் தலைமையில் 96 சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஜோ டிமியோக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி 23 நேர போராட்டத்திற்கு பின் வரலாற்று சிறப்புமிக்க இரு கைகள் மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்த சிகிச்சையின் மூலம் ஜோ டிமியோ தற்போது தனது இரண்டு கைகளுடனும், வடுக்கள் இல்லாத முகத்துடனும் இருக்கிறார். இவர் உலகத்தின் முதல் முகம் மற்றும் இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை பெற்ற நபராக திகழ்கிறார். ஏனென்றால் இதற்குமுன் இந்த சிகிச்சை இரண்டு நபர்களுக்கு செய்யப்பட்டது. ஆனால் அது இரண்டும் தோல்வியடைந்தது.
ஏனென்றால் அதில் ஒரு நோயாளி தொற்று தொடர்பான சிக்கலால் இறந்தார். மற்றொருவர் சிகிச்சைக்குப் பிறகு முன்னேற்றம் அடையாமல் இருந்ததால் மீண்டும் அவரது கைகளை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆகையால் உலகின் முகம் மற்றும் கைகளை மாற்று அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெற்ற முதல் மனிதராக ஜோ டிமியோ திகழ்கிறார்.