சென்னையில் உள்ள 650 பரிசோதனை மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே பரிசோதனையை தீவிரப்படுத்தினால் மட்டுமே பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்ற முடிவுக்கு அனைத்து மாநிலங்களும் வந்துவிட்டன.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சமயத்தில், பல மடங்கு குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும் தமிழக மக்களுக்கு ஒரு விதமான மன திருப்தியை அளிக்கிறது. இந்நிலையில் சுகாதாரத் துறையும், மாநில அரசும் பரிசோதனை அதிகப்படுத்துவதற்காக பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையில் 650 மருத்துவ முகாம்களை பரிசோதனை மேற் கொள்வதற்காக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் யாரேனும் விடுபட்டால் அவர்களது ஆரோக்கியத்தில் கவனம் கொண்டு, இருமல், காய்ச்சல், சளி, தொண்டை வலி அறிகுறிகள் தென்பட்டால் தானாக மருத்துவ முகாம்களுக்கு சென்று அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கையில், 70 ஆயிரம் சுய உதவிக் குழுவினர் இணைந்து செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.