கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு துருக்கியில் உள்ள சில நிறுவனங்கள் லட்சக்கணக்கான முகமூடிகளை தயாரித்து அனுப்பி வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் 175_ஆக இருந்த நிலையில் தற்போதைய எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் 9,692 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தங்களுக்கும் இந்த வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் பலரும் மூக்கு மற்றும் வாயை மூடும்படியான முகமூடிகளை அணிந்து கொண்டு வலம்வருகின்றனர்.
சீனாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் முகமூடிகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆகவே துருக்கியில் உள்ள சில நிறுவனங்கள் இரவு- பகல்பாராமல் தேவையை அறிந்து லட்சக் கணக்கில் வேகமாக முகமூடிகளை தயாரித்து சீனாவுக்கு அனுப்பிவருகின்றன.