விவசாயிகளின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் 62 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தியபோது போலீசார் வைத்துள்ள தடையை மீறி விவசாயிகள் நுழைந்ததால் விவசாயிகளின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறை களமாக மாறியது.
இதையடுத்து டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும். பிடிவாதம் பிடித்து விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் என கருதினால் விபரீத முடிவே ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.