உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கூடிய வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதாகவும். அதில் 12% உணவுகள் போதுமான அளவு தரத்துடன் செய்யப்படவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும், பல ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு தயாரிக்கும் பொழுது உரிய சுத்தமான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களில் உணவருந்தியவருக்கு உணவு விஷமாகி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான ஹோட்டல்களிலும், ரெஸ்டாரண்ட்களிலும், சமையலறைகளிளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். உணவு சமைப்பதை வாடிக்கையாளர்கள் பார்க்க தொலைக்காட்சி வைக்கப்பட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வி. ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நடராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓட்டலில் தரமான, சுகாதாரமான, பாதுகாப்பான உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதை அடுத்து நீதிபதிகள் பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை பல ஓட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில் மனுதாரரின் கோரிக்கையில் சாத்தியம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.