சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடியாக களம் இறங்கி பல கைதுகளை செய்துவரும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பற்றிய தொகுப்பு
சாத்தான்குளம் இரட்டை கொலையில் தொடர்புடைய காவல் நிலைய போலீசாரை கதிகலங்க வைத்து விரட்டி விரட்டி கைது செய்துள்ளது சிபிசிஐடி. இந்த அதிரடிக்கு சொந்தக்காரர் டிஎஸ்பி அனில்குமார். யார் இவர்? தந்தை மகன் மரண வழக்கை நீதிமன்ற உத்தரவின் பேரில் கையிலெடுத்த சிபிசிஐடி விசாரணை தொடங்கி ஒரே நாளில் கொலை வழக்காக FIR-ஐ மாற்றி அடுத்தடுத்து கைது நடைபெறுகிறது. இந்த அதிரடிக்கு சொந்தக்காரரான சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சபுரத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊரில் பள்ளிக் கல்வியையும் தூத்தூர் ஜூட்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து 1996 ஆம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளர் பணியோடு காவல் துறைக்கு வந்தவர் அனில்குமார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 6 மாத காலம் பயிற்சி முடித்த அவருக்கு பிரச்சனை குறையாத முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளராக முதல் பணி. கள்ளச்சாராயம் தலைவிரித்தாடிய அங்கு இன்றுவரை எழ முடியாத அளவிற்கு ஒழித்துக்கட்டி சாதித்தவர் அனில்குமார். தூத்துக்குடி மாவட்ட சிறப்பு படை, மாவட்ட தனிப்பிரிவு என அடுத்தடுத்து பல்வேறு பதவிகளை வகித்த அவர் தற்போது நெல்லை சரக சிபிசிஐடி டிஎஸ்பி. அவர் மேற்கொண்ட முந்தைய நடவடிக்கைகள் அவரது பதவி உயர்வுக்கு வழி வகுத்தன.
ஆனால் டிஎஸ்பியாக பொறுப்பேற்றவுடன் நாடே திரும்பிப் பார்த்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு, நெல்லை மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு, நாகர்கோவில் காசி வழக்கு, தற்போது சாத்தான்குளம் வழக்கு அத்தனையும் சர்ச்சைக்குரியவை. 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சிவகிரி கொலை வழக்கையும் உடலையும் தோண்டி எடுத்து குற்றவாளிகளை கைது செய்த பெருமைக்கு உரியவர் அனில்குமார். சிறந்த பணிக்காக ஜனாதிபதி விருது பெற்ற அனில்குமார் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்க பதக்கம் வாங்கித் தந்தவர். தமிழகத்திற்கும் தங்கம் வாங்கி தந்து பெருமை சேர்த்த தங்க மகன் அனில்குமார் தான் தற்போதைய நிஜ ஹீரோ.