கேரள மாநிலத்தில் பூனைகள் அதிகளவில் உயிரிழந்து வருவது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே கேரள மாநிலத்தில் அதிகப்படியான பூனைகள் தொடர்ந்து மரணமடைந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கேரளாவின் மனந்தவடி, மேப்படி பகுதிகளில் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்களில் சிலர் விலங்குகள் நல துறையினரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில்,
அவர்கள் இறந்து போன பூனைகளின் ரத்த மாதிரியை சோதனைக்கு எடுத்துச் சென்ற எடுத்துச் சென்றனர். இதுகுறித்து விலங்குகளுக்கான சிறப்பு மருத்துவர் பேசுகையில், ஃபெலின் பார்வோ என்னும் வைரஸ் தொற்றால் தான் பூனைகள் தொடர்ந்து மரணம் அடைந்து வருவதாகவும், இதனை சரிசெய்ய ஏற்கனவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த வைரஸ் பூனைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்பதால், பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த இரண்டு நாள்களில் மட்டும் மேப்படி பகுதிகளில் மட்டும் 13 க்கும் மேற்பட்ட பூனைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.