2020-ம் ஆண்டு கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரங்கள் மைனஸில் சென்றது. ஆனால் கொரோனா உண்டான சீனா மட்டுமே வளர்ச்சியை பதிவு செய்து ஒரே பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
2020-ல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி 2.3% ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இது 6.5% ஆக பதிவாகியுள்ளது. உலகப் பொருளாதாரங்கள் அனைத்தும் இந்த காலக்கட்டத்தில் மைனஸிற்கு சென்றன. ஏற்றுமதி துறையின் வளர்ச்சியால் சீனா இக்கட்டான காலக்கட்டத்திலும் வளர்ச்சி கண்டுள்ளது. 2021-லும் கூட மிகப் பெரிய பொருளாதாரங்களை, சீனப் பொருளாதாரம் விஞ்சும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். நம் அண்டை நாடான பங்களாதேஷும் 2020-ல் நேர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்தியா முதல் காலாண்டில் 20%-க்கு மேல் சறுக்கலை கண்டது. பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டிருக்கிறது. 2021-ல் இந்திய ஜி.டி.பி., 5% வளர்ச்சியடையும் என கணித்துள்ளனர். சீனாவின் ஜி.டி.பி., அமெரிக்க ஜி.டி.பி.,யின் அளவை நெருங்கும் என்கின்றனர். 2019-ல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 14.3 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. இது அமெரிக்க ஜி.டி.பி.,யான 21.4 டிரில்லியன் டாலர்களில் மூன்றில் 2 பங்காகும். 2020 மற்றும் 2021-ல் முறையே சீனாவின் ஜி.டி.பி., வளர்ச்சியானது அமெரிக்காவை விட 5.9% மற்றும் 4.4% புள்ளிகள் அதிகரித்துள்ளது.