சசிகலா மீது தெரிவிக்கப்பட்ட புகாருக்காக வரும் 2-ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் 17வது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம், பொதுச் செயலாளர் பதவியை நீக்கி, அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்வு செய்ததை ஏற்றது.
இக்கட்சிக்காக உரிமை கேட்டிருந்த சசிகலாவின் மனு, தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. எனினும், நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு மதிப்பு கொடுக்காமல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்று சசிகலா தொடர்ந்து பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பது ஏமாற்றக் கூடிய செயல்.
அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாம்லம் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனினும், காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆகவே, சசிகலா மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மாம்பலம் காவல்துறையினர் சார்பாக பதில் மனு தரப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் 2ஆம் தேதியன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.