ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கால நீட்டிப்பு கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
8வது முறையாக கால நீட்டிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 7வது முறையாக வழங்கப்பட்ட கால நீட்டிப்பு 24ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.
இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்குமாறு அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், ஏற்கனவே 4 முறை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 முறை 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடைசியாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வரும் 24ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், மேலும் கால நீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.