சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விவசாயி ஒருவர் வேன் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயியான குருநாதன் என்பவர் மினிவேன் ஒன்றில் தனது வாழை தோட்டத்திலிருந்து வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அவரது மகன் சக்தீஸ்வரன் அந்த மினிவேனை ஓட்டி சென்றுள்ளார். இதையடுத்து மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள விலக்கு அருகே அந்த மினிவேன் சென்று கொண்டிருந்த போது திடீரென்று பழுதாகி சாலையில் நின்றுள்ளது. இதனால் மினிவேனில் இருந்த குருநாதன் கீழே இறங்கி ஓரமாக நின்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக சரக்கு வேனை ஓட்டி வந்த மானாமதுரையை சேர்ந்த திருப்பதி என்பவர் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த குருநாதன் மீது சரக்கு வேனால் வேகமாக மோதியுள்ளார். அதில் குருநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் டிரைவர் மீது வழக்குப்பதிந்த திருப்புவனம் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.