வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபரை மாநகர தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரம் பகுதியில் கடந்த ஜுன் மாதம் 11 – ஆம் தேதியன்று அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாநகர போலீஸ் கமிஷனரான வனிதா தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை கீழபஞ்ச பட்டி பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் சுரேஷ்குமார் தமிழகம் முழுவதும் நான்கு சக்கர வாகனங்களை திருடி அதில் செம்மரம் மற்றும் எரிசாராயம் போன்ற வாகனங்களில் கடத்தலுக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் சுரேஷ்குமார் வைத்திருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார், 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள சரக்கு வாகனம், 14 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.