உலக சுகாதார மையம், பயண தடைகள் விதிப்பதன் மூலம் ஓமிக்ரான் வைரஸை தடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவுடன், உலக நாடுகள் அந்நாட்டின் மீது பயணத் தடை விதிக்க தொடங்கியது. அதனையடுத்து இந்திய அரசு, பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர், சீனா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜிம்பாப்வே, வங்கதேசம், மோரிசியஸ் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் உலக சுகாதார மையம், இந்த நாடுகளுக்கு பயணத் தடை விதிப்பதால், ஓமிக்ரான் பரவலை தடுக்க முடியாது என்று கூறியிருக்கிறது. பயணத் தடை விதிப்பது மக்களின் சாதாரண வாழ்க்கையை பாதிப்பதோடு, வாழ்வாதாரத்தின் மீது அதிக சுமையை உண்டாக்கும். மேலும், 60 வயதுக்கு அதிகமானவர்கள், இதயநோய், புற்றுநோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பயணத்தை தள்ளி வைக்க அறிவுறுத்த வேண்டும்.
மேலும், வருங்காலத்தில் நோய் தொற்றுகளை சமாளிக்க சர்வதேச உடன்படிக்கை அவசியமானது. உலக நாடுகள் ஆபத்துக்கள் ஏற்படாதபடி அத்தியாவசியமான சுகாதார கட்டமைப்புகளை உண்டாக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது.