வேளாண்துறை அமைச்சர் திரு. துரைகண்ணுவின் உடல்நிலையில் மிக மிக பின்னடைவு சந்தித்துள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
72 வயதாகும் துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 13-ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திரு. துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று இருப்பதாகவும் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியதை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது எனவும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை ஒத்துழைக்கிறதா ? என்பதை அடுத்த 24 மணி நேரத்தில் தான் சொல்ல முடியும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இப்போதைக்கு அதிக உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளித்து வருகின்றோம். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியவில்லை எனவும் மருதுவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.